வங்கி தேர்வில் அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற கின்ஸ் அகடாமி மாணவர் வல்லரசு. தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் பாராட்டு.
கடந்த ஆண்டு நடந்த ஆர்ஆர்பி வங்கி தேர்வில் தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் படித்த மாணவர் V.வல்லரசு 72.28/100 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார்.
மாணவர் வல்லரசு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர். அவர் தூத்துக்குடி போல்பேட்டையில் இயங்கி வரும் கின்ஸ் அகடமி என்ற இலவச அகடமியில் படித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த ஆர்ஆர்பி வங்கி தேர்வில் அவர் இந்த சாதனை புரிந்துள்ளார்.
அவரது இந்த சாதனையை பாராட்டி கின்ஸ் அகடமியில் உள்ள ஒரு ஹாலுக்கு வல்லரசு ஹால் என்று பெயர் சூட்டும் விழா நேற்று நடந்தது.
வல்லரசோடு சேர்ந்து மேலும் 14 மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்களுக்கான பாராட்டு விழாவும் நேற்று நடந்தது .
இந்த விழாவுக்கு அகாடமி நிறுவனர் எஸ். பேச்சி முத்து தலைமை ஏற்றார். கின்ஸ் அகாடமி ஆங்கில பயிற்றுனர் அபித் வரவேற்றார்.
தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி L. மதுபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த அகடமியில் உள்ள ஒரு ஹாலுக்கு வல்லரசு ஹால் ஹால் என்று பெயர் சூட்டினார்.
மேலும் இந்த தேர்வில் வெற்றி பெற்ற மேலும் 14 மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது...
இங்கு படித்த மாணவர் ஒருவர் அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார் என்ற தகவலை நான் கேட்ட போது என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால் இப்போது அது எனக்கு ஒரு பெருமையாக இருக்கிறது . இது உண்மையிலேயே பாராட்டப்படக் கூடிய ஒரு விஷயம்.
ஒரு மனிதருடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி படிப்புக்கு மட்டுமே உண்டு. அவருக்கு பின்னால் அவரது தலைமுறையே மாறிவிடும்.
அர்ப்பணிப்பு உணர்வோடு கற்றுக் கொடுக்கும் பயிற்சி மையங்களும் அதற்கான பயிற்றுனர்களும் கிடைப்பது மிகவும் அரிதாகும். இந்த அகடமியில் அப்படிப்பட்ட பயிற்றுனர்கள் இருக்கிறார்கள் .
நான் கல்லூரியில் படிக்கும் போதே இது போன்ற ஒரு அகடமியில் சேர்ந்து படிக்க துவங்கி விட்டேன். அப்போது தேர்வில் வெற்றி பெற முடியுமா என்று எனக்குள் ஒரு பயம் இருந்தது. ஆனால் அதன் பிறகு அநேக தேர்வுகள் எழுதி எழுதி எனக்குள் இருந்து பயம் போனது. நம்பிக்கை வந்தது.
தொடர் முயற்சி என்பது மிக மிக அவசியம். ஓரிரு தேர்வுகள் மட்டும் எழுதிவிட்டு போய்விடக்கூடாது . தொடர்ந்து தேர்வுகள் எழுத வேண்டும். தேர்வு நோக்கோடு மட்டுமே படிக்க வேண்டும். வாய்ப்புகள் எதையும் தவறவிடக்கூடாது. அத்தனை தேர்வுகளையும் எழுத வேண்டும். தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்தித்து அவர்களிடம் எவ்வாறு தேர்ச்சி பெற்றீர்கள்? எப்படி படித்தீர்கள் என்பது குறித்து விளக்கம் கேட்க வேண்டும். முந்தைய ஆண்டு கேள்வித்தாள்களை பார்க்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தங்களுடைய பலம் என்ன பலவீனம் என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும் . அதற்கு இது போன்ற அகாடமிகள் பெரிதும் உதவும்.
தூத்துக்குடி மக்கள் மிகவும் கடின உழைப்பாளிகள். இங்குள்ள மாணவர்களும் கடுமையாக படிக்கிறார்கள். மாணவர் வல்லரசு வெற்றி பெற்றது தமிழகத்திற்கு மட்டுமல்லாது இந்தியாவுக்கே பெருமை தருவதாகும்.
இவ்வாறு அவர் பேசினார் .
அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற மாணவர் வல்லரசு நன்றி கூறினார் . நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் விழாவில் கலந்து கொண்டனர்.