.இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் உள்ளது.
காலம்காலமாக பல்வேறுபட்ட முன்னணி அரசியல் கட்சித் தலைவர்கள் வருவதும் மரியாதை செலுத்துவதும் வாடிக்கையாக உள்ள நிலையில், பகுஜன் தேசியக் கட்சியின் தேசியத் தலைவர் பிரமோத் குறில் தனது கட்சி ஆதரவாளர்களுடன் இன்று வருகை தந்தார்.
அனைத்திந்திய DNT சமூக நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் வீர பெருமாள் தலைமையில் DNT சமூகத்தின் மூத்த குடிமக்களின் சந்திப்பில் அவர் சிறப்புரையாற்றினார்.
அப்போது தமிழ் நாடு எனக்கு புதியதல்ல. நூறு தடவைக்கும் மேலாக வந்து சென்றிருக்கிறேன். தமிழகத்தில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நான் நன்கு அறிமுகம் ஆனவன். இன்று இங்கு நான் வந்திரிருப்பதன் நோக்கம், காலம்காலமாக ஆட்சியாளர்கள் தங்கள் சுய நலத்திற்காக சாதிப் பிரிவினை பேசிப் பேசி பகையுணர்வை மட்டுமே வளர்த்துள்ளனர்.
புறந்தள்ளப்பட்ட மக்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக தொடர்ந்து பல்வேறு வகைகளில் உழைத்த ஶ்ரீ முத்துராமலிங்க தேவர் போன்ற தேசியத் தலைவர்களை பாடமாகக் கொண்டு பட்டியலின - பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் சகோதரத்துவ உணர்வோடு வாழ இளம் தலைமுறையினருக்கு கற்பிக்க வேண்டும் என்பதையும் ஒன்றிய, மாநில அரசுகள் அரசு பொது நிறுவனம் அல்லது அமைப்புகளுக்கு ஶ்ரீ முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்டி பொது மக்கள் மத்தியில் அவரை பொதுவான தலைவராக அடையாளப் படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சாதிப் பிரிவினையை தூண்டும் அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக சகோதரத்துவத்தை வளர்க்க எங்கள் பகுஜன் தேசியக் கட்சி (அம்பேத்கர்) தொடர்ந்து பணி செய்யும் என்பதையும் உறுதிப்படுத்தினார். கூட்டத்தின் பகுஜன் தேசியக் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பகுஜன் லூயிஸ், மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் சீனிவாசன், திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் வேல்முருகன் உடனிருந்தனர்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அனைத்திந்திய DNT சமூக நல சங்கத்தினர் செய்திருந்தனர்.